வீடமைப்பு கடன்களை செலுத்தாத தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர தீர்மானம்

வீடமைப்பு கடன்களை செலுத்தாத தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர தீர்மானம்

By Sujithra Chandrasekara

18 Dec, 2017 | 8:38 pm

வீடமைப்பு கடன்களை செலுத்தாத தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ட.எஸ் பலன்சூரிய தெரிவித்துள்ளார்.

அதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

யட்டியாந்தோட்டை மீபிட்டிகந்த தோட்டத்தில் 2000 ஆம் ஆண்டு 7 பர்ச்சஸ் காணி வழங்கப்பட்டு 15 வருட கடன் திட்டத்தில் 30,000 ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி மையத்தால் 2000 ஆண்டு முதல் 2017 ஆண்டு வரை 17 வருடங்கள் 450 ரூபாய் மற்றும் 550 ரூபாய் வரை தோட்ட மக்களின் சம்பளத்தில் 89,760 ரூபாய் அறவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிக பணத்தை கடனாக செலுத்திய பின்னரும் மேலும் தொகை பணத்தை செலுத்துமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சிலருக்கு 34,500 ரூபாய் செலுத்துமாறும் சிலருக்கு 41,000 ரூபாய் செலுத்துமாறும் மொத்தமாக 19 குடும்பங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து நாம் கடந்த 13 ஆம் திகதி செய்தி வௌியிட்டிருந்தோம்.

இவ்வாறு மலையகத்தின் பல பகுதிகளில் அப்பாவி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் சூறையாடப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

கேகாலை மாவட்டத்தில் மாத்திரம் 25 தோட்டங்களில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

வீடமைப்பு கடனுக்காக தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு தொகை அறவிடப்படுகிறது.

பின்னர் தோட்ட நிர்வாகம் அதனை வீடமைப்பு அதிகார சபைக்கு செலுத்த வேண்டும்.

எனினும் தொழிலாளர்களிடம் பணம் அறவிடப்பட்டுள்ள போதிலும் அது வீடமைப்பு அதிகார சபைக்கு வழங்கப்படவில்லை.

அவ்வாறு வழங்காத தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் தலைவர் ட.எஸ் பலன்சூரிய நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து அந்தப் பணத்தை அதிகார சபைக்கு பெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.