டெல்லி நகரின் வளி மாசடைவினால் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு உபாதை

டெல்லி நகரின் வளி மாசடைவினால் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு உபாதை

By Sujithra Chandrasekara

03 Dec, 2017 | 7:18 pm

இந்தியாவின் டெல்லி பெரோஷா கொட்லா மைதானத்தில் நிலவிய வளிமாசடைவினால் இலங்கை அணியின் மூன்று வீரர்கள் சுகவீனமடைந்துள்ளனர்.

இந்த வீரர்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் இன்றாகும்.

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி டெஸ்ட் அரங்கில் தன்னுடைய 06 ஆவது இரட்டைச்சதத்தை எட்டினார்.

டெஸ்ட் அரங்கில் அணித்தலைவர்களில் அதிக இரட்டைச்சதங்களை விளாசிய தலைவர் என்ற மைல்கல்லை எட்டிய விராட் கோஹ்லி , 243 ஓட்டங்களைப் பெற்றார்.

மதியபோசன இடைவேளைக்கு பிறகு இலங்கை அணி வீரர்கள் முக மறைப்புக்களை அணிந்து மைதானத்திற்குள் பிரவேசித்தனர்.

வளிமாசடைவினால் ஏற்படக்கூடிய பாதிப்பில் இருந்து விடுபடும் வகையில் வீரர்கள் இவ்வாறு ஆடுகளத்திற்கு வந்திருந்தனர்.

வளிமாசடைவு மைதானத்தில் தொடர்ந்தும் நிலவிய நிலையில் இலங்கை அணி வீரர்கள் உபாதைகளுக்கு முகங்கொடுத்தனர்.

இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 536 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த பிரச்சினையால் தொடர்ந்தும் விளையாட முடியாதுள்ளதாக இலங்கை அணி வீரர்கள் போட்டி நடுவர்களிடம் அறிவித்தனர்.

இதன்போது தமது முதல் இன்னிங்ஸை நிறுத்திக் கொள்வதாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி அறிவித்தார்.

முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி ஓட்டமெதனையும் பெறாத நிலையில் முதல் விக்கெட்டை இழந்தது.

முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் டெஸ்ட் அரங்கில் தனது 29 ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.

இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 03 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 131 ஓட்டங்களை பெற்றிருந்தது.

போட்டி நடைபெறும் பெரோஷா கொட்லா மைதானத்தின் சூழல் நிலை தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் நிறுவனம் அறிக்கையொன்றை வழங்குவதாக அறிவித்துள்ளதென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டது.