இலங்கை தேயிலை இறக்குமதிக்கு ரஷ்யா விதித்துள்ள தடை குறித்து ஆராய நடவடிக்கை

இலங்கை தேயிலை இறக்குமதிக்கு ரஷ்யா விதித்துள்ள தடை குறித்து ஆராய நடவடிக்கை

By Sujithra Chandrasekara

18 Dec, 2017 | 9:39 am

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிற்கும் தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கும் இடையிலான விசேட பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது.

இலங்கை தேயிலை சபையின் இன்று காலை 10 மணியளவில் பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் தேயிலை உள்ளிட்ட விவசாய உற்பத்திகளுக்கு தற்காலிகமாக இறக்குமதி தடை விதிப்பதற்கு ரஷ்யா தீர்மானித்துள்ளதாக கடந்த 14 ஆம் திகதி ரொய்டர் செய்தி சேவையில் குறிப்பிட்டிருந்தது.

இலங்கையிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தேயிலையில் ஒரு வகையான வண்டு (Khapra beetle) ஒன்று காணப்பட்டதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ரொய்டர் செய்தி சேவையின் தகவலுக்கு அமைய இன்று முதல் இறக்குமதி தடை விதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது, எவ்வாறாயினும் இறக்குமதி தடை தொடர்பில் ரஷ்ய அரசாங்கத்தின் இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் என இலங்கை தேயிலை சபை குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவர், மற்றும் இலங்கை தேயிலை சபையின் ரஷ்யாவிற்கான பிரதிநிதிக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதேவேளை இலங்கை தேயிலைக்கு ரஷ்யாவினால் விதிக்கப்படவுள்ள இறக்குமதி தடையை நீக்குமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தேயிலை ஏற்றுமதி செய்த தனியார் நிறுவனம் தவறிழைத்திருந்தால், அவர்களின் தேயிலை ஏற்றுமதிக்கான அனுமதிப் பத்திரத்தை முழுமையாக தடை செய்யவுள்ளதாகவும் ஜனாதிபதி நேற்று தெரிவித்திருந்தார்.

இலங்கை தேயிலையை கொள்வனவு செய்யும் பிரதான வௌிநாட்டு கொள்வனவாளராக ரஷ்யா காணப்படுகின்றது. வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் 25 மில்லியன் கிலோகிராம் தேயிலை இலங்கையிலிருந்து ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன் அதனூடாக 19 பில்லியன் ரூபா வருமானமும் ஈட்டப்பட்டுள்ளது.