இலங்கை, இந்தியா இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவு

இலங்கை, இந்தியா இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவு

By Bella Dalima

06 Dec, 2017 | 7:37 pm

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

410 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை சார்பாக தனஞ்சய டில்சான் சதமடிக்க, அறிமுக வீரரான ரொஷேன் சில்வா அரைச்சதமடித்து தோல்வியைத் தவிர்க்க உதவினார்.

டெல்லி பெரோஷ் ஷா கொட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 536 ஓட்டங்களையும் இலங்கை 373 ஓட்டங்களையும் பெற்றன.

இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 246 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, இலங்கை அணியின் வெற்றி இலக்கு 410 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இலக்கை நோக்கி இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 31 ஓட்டங்களுடன் இன்றைய ஐந்தாம் நாளைத் தொடர்ந்தது.

அஞ்சலோ மெத்யூஸ் ஓர் ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

அந்த ஆட்டமிழப்பு No Ball என பின்னர் தெரியவந்தாலும் அதனால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை.

அணித்தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் தனஞ்சய டி சில்வா ஜோடி 112 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில், சந்திமால் 36 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அபாரமாகத் துடுப்பெடுத்தாடி தனது மூன்றாவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்த தனஞ்சய டி சில்வா 119 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, உபாதை காரணமாக களத்தை விட்டகன்றார்.

அறிமுகப் போட்டியில் விளையாடிய ரொஷேன் சில்வா அபாரமாகத் துடுப்பெடுத்தாடி அரைச்சதமடித்தார்.

இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 299 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 1-0 எனும் ஆட்டக் கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

போட்டியின் சிறப்பாட்டக்காரர் மற்றும் தொடரின் சிறந்த வீரர் ஆகிய இரண்டு விருதுகளையும் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி பெற்றுக்கொண்டார்.