தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்த தென் கொரியா இணக்கம்: 5 உடன்படிக்கைகள் கைச்சாத்து

தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்த தென் கொரியா இணக்கம்: 5 உடன்படிக்கைகள் கைச்சாத்து

எழுத்தாளர் Bella Dalima

29 Nov, 2017 | 7:49 pm

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு தென் கொரியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி முன் ஜே இன் ஆகியோருக்கு இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது.

சியோல் நகரிலுள்ள ப்ளூ ஹவுஸ் ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, தென் கொரிய ஜனாதிபதி முன் ஜே இனினால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இராணுவ மரியாதையைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பமானது.

இரு தரப்பு உறவுகளை புதிய உத்வேகத்துடன் பலப்படுத்துவது தொடர்பில் இருநாட்டுத் தலைவர்கள் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

சமமான அனுபவம் கொண்ட இரு நாடுகள் என்ற ரீதியில் உறவுகளை பலப்படுத்துவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக தென் கொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு 40 வருடங்களை எட்டியுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ள இந்த விஜயத்தால் இரு தரப்பு உறவுகள் மேலும் வலுப்பெறும் என தென் கொரிய ஜனாதிபதி முன் ஜே இன் கூறியுள்ளார்.

ஹோமாகம டெக் சிட்டி மற்றும் கட்டுநாயக்க எரோ சிட்டி நிறுவனங்களை ஸ்தாபிக்க தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்குமாறு ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளுக்கு தென் கொரிய ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

அரச தலைவர்களுக்கான சந்திப்பில் 5 உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இந்த உடன்படிக்கைகளில் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் தலதா அத்துகோரல ஆகியோர் இலங்கை சார்பில் கையொப்பமிட்டனர்.

இலங்கை பணியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற தொழில்வாய்ப்புக்களையும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த சந்திப்பின் போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்காலத்தில் விவசாயத்துறை மற்றும் கால்நடை வளத்துறையிலும் தொழில்வாய்ப்புக்களை விஸ்தரிப்பதாக தென் கொரிய ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, பொருளாதார ஒத்துழைப்பின் கீழ் கடன் பெறுவதற்கான உடன்படிக்கை, கலை, கலாசார, கல்வி, இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை சார்ந்த உடன்படிக்கைகளும் கையொப்பமிடப்பட்டுள்ளன.

இந்த உடன்படிக்கைகளில் இரு நாடுகளினதும் வௌிவிவகார அமைச்சர்கள் கையொப்பமிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்