கல்பிட்டியில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடம் அழிவடையும் அபாயம்

கல்பிட்டியில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடம் அழிவடையும் அபாயம்

எழுத்தாளர் Bella Dalima

27 Nov, 2017 | 9:30 pm

புத்தளம் மாவட்டத்தில் காணிகளைக் கொள்வனவு செய்யும் போது கவனமாக இருத்தல் வேண்டும் என மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான பாலித ரங்கே பண்டார இதர மாவட்டங்களின் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

ஊடகங்களூடாக அவர் இதனைத் தெரிவித்தமைக்கு பிரதான காரணமாக அமைவது புத்தளம் மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் காணிகளை போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்து விற்கும் நிகழ்வுகள் இடம்பெறுவதே என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

போலி உறுதிப்பத்திர தயாரிப்பில் புத்தளம் மாவட்டம் முன்னணியில் உள்ளது என்பதை சக்தியின் தேடல் கடந்த ஒரு தசாப்த காலப்பகுதிக்கு முன்னரே சுட்டிக்காட்டியிருந்தது.

இதனை காலம் தாழ்த்தி புரிந்துகொண்டிருக்கும் இராஜாங்க அமைச்சருக்கு போலி உறுதிப்பத்திரத்திற்கு அப்பால் சென்று இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பிலும் தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

அரசாங்கத்திற்கு சொந்தமான நிலப்பகுதிகளை பலாத்காரமாகப் பெற்றுக்கொள்வதே அந்த சட்டவிரோத செயலாகும்.

அரசியல்வாதிகளும் அவர்களுடைய அடிவருடிகளும் இதில் பிரதான வகிபாகம் கொள்வதை சிந்திக்குமளவிற்கு அமைச்சருக்கு ஞானம் இருக்கும் என்பது வௌிப்படை.

அதனைத் தெரிந்துகொள்வதற்கு தேவைப்படுவது உண்மையான தேடலாகும்.

அரசியல் புகலிடம் கிடைத்துள்ள சிலர், கல்பிட்டியில் பள்ளிவாசல்துறை பிரதேசத்தின் அல்லிராணி தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் பலாத்காரமாக நில அபகரிப்பில் ஈடுபடுவது இந்த சம்பவங்களுக்கான அண்மைய உதாரணமாகும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கதைகள் பலவற்றுக்கு உரிமை கோரும் இந்தப் பிரதேசத்தில் குவேனி வாழ்ந்தார் என்பதற்கான தௌிவான சான்றுகள் இல்லாவிடினும், காணப்படும் குளத்துடன் அண்டிய பிரதேசம் தொன்மைப் பிரதேசமாக வர்த்தமானியூடாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.

கடலுடன் சேர்ந்திராவிடினும் மழை நீரால் வளப்படும் இந்த குளமானது கடல் நீரின் பல்வகைத்தன்மையை கொண்டிருப்பதாக அறியப்படுகின்றது.

அத்துடன், சிலபோது கடல் வாழ் உயிரினங்களும் இங்கு வந்து செல்வதாக குறிப்பிடப்படுகின்றது.

மும்மதங்களையும் பின்பற்றும் மக்கள் இங்கு வாழ்ந்து வரும் சூழலில், நல்லிணக்கத்துடன் வாழும் அதே தருணத்தில், இந்த பிரதேசங்களையும் அவர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

எனினும், இங்கு வரும் திட்டமிட்ட சிலரால் பாதுகாப்பு வேலிகளும் அமைக்கப்பட்டு நில அபகரிப்பு இடம்பெறுவதாக மக்கள் விசனம் தெரிவித்தனர்.

கல்பிட்டி பிரதேச செயலகத்திற்கு சொந்தமான இந்த பகுதி தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பினும், அதற்கு மேல் இந்த இடத்திற்கு வரும் மாஃபியா கும்பல் தென்னங்கன்றுகளை நட்டி தாம் நீண்ட காலமாக அங்கு வாழ்ந்து வருவதாக தகவல் கொடுக்க முற்படுவதாகக் கருத இயலும்.

இந்நிலையில், இந்த அபகிரப்பு குறித்து உடன் கவனம் செலுத்த வேண்டியது புத்தளம் மாவட்ட செயலாளரினதும் வட மேல் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபரினதும் கடமையல்லவா?

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்