யாழில் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் விடுமுறை இரத்து

யாழில் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் விடுமுறை இரத்து

எழுத்தாளர் Bella Dalima

17 Nov, 2017 | 3:23 pm

யாழ். பிராந்தியத்தில் உள்ள அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வாள்வெட்டுத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜித குணரத்ன தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற வாள்வெட்டுத் தொடர்பில் 6 பேர் நேற்று (16) கைது செய்யப்பட்டனர்.

கடந்த 12 ஆம், 13 ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் மானிப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களில் 12 பேர் காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

ஆவா குழுவைச் சேர்ந்த 39 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

அவர்களில் 25 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

யாழ். குடாவில் இடம்பெற்று வரும் வாள்வெட்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தொடர்ந்தும் தீவிர சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜித குணரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, யாழ். குடாநாட்டை அச்சுறுத்தும் வாள்வெட்டுக்கள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வட பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று பணிப்புரை விடுத்திருந்தார்.

வட பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ, யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், யாழ். நகர பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ். தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரை நேற்று (16) நீதிமன்றத்திற்கு அழைத்து நீதிபதி இந்த பணிப்புரையை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்