28 ஆவது காலக்கிரம மீளாய்வு செயற்குழுக் கூட்டத்தில் இன்று இலங்கை தொடர்பில் ஆராய்வு

28 ஆவது காலக்கிரம மீளாய்வு செயற்குழுக் கூட்டத்தில் இன்று இலங்கை தொடர்பில் ஆராய்வு

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2017 | 6:56 am

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்று வரும் 28 ஆவது காலக்கிரம மீளாய்வு செயற்குழுக் கூட்டத்தில் இலங்கை தொடர்பில் இன்று ஆராயப்படவுள்ளது.

இதன்போது பல சர்வதேச நாடுகள் இலங்கை மீது கேள்விகளை எழுப்பவுள்ளன.

அமெரிக்கா,பிரிட்டன்,ஜேர்மன், நோர்வே போர்த்துக்கள் மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பிலான கேள்விகளை எழுப்பவுள்ளன.

இலங்கை தொடர்பில் அந்ததந்த நாடுகள் எழுப்பவுள்ள கேள்விகள் ஏற்கனவே ஐ.நா மனித உரிமை பேரவைக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கேள்விகளை மனித உரிமை பேரவை, தமது உத்தியோகபூர்வ இணைத்தள பக்கத்தில் பிரசுரித்துள்ளது.

அதனடிப்படையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இராணுவம் மற்றும் அதிகாரிகள் பொறுப்புக் கூறாமல் இருப்பது குறித்து தாம் அதிருப்தி அடைவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எனவே மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக் கூறல் விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் எப்போது நீதியான மற்றும் நம்பகரமான விசாரணைகளை முன்வைக்கும்? என அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் எப்போது நீக்கும் எனவும், அரசியலமைப்பு செயற்பாடுகள் தாமதமடைவதாக அறியக்கிடைப்பதாகவும், அரசாங்கம் இதனை எவ்வாறு முன்கொண்டு செல்லும் எனவும் அமெரிக்கா வினவியுள்ளது.

பொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் எவ்வாறான செயற்பாடுகளை எடுத்துள்ளது? காணியை திருப்பி வழங்காத மக்களுக்கு எவ்வாறு நட்ட ஈடு வழங்கப்படும்? போன்ற பல கேள்விகளை அமெரிக்கா இலங்கையிடம் முன்வைத்துள்ளது.

ஜெனீவா பிரேரணையின் பிரகாரம் அரசாங்கம் எப்போது பொறுப்புக் கூறல் விசாரணை பொறிமுறையை முன்னெடுக்கும் என பிரிட்டன் கேள்வி எழுப்பியுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரிட்டன் இலங்கை அரசாங்கத்திடம் வினவியுள்ளது.

இதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டம் இலங்கையில் எப்போது நீக்கப்படும் என ஜேர்மனியும் கேள்வி எழுப்பியுள்ளது?

பலவந்தமாக காணாமற்போனவர்கள் தொடர்பிலான சர்வதேச சாசனம் தொடர்பிலான சட்டம் எப்போது கொண்டுவரப்படும்?, காணாமற்போனவர்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலான பட்டியல் அரசாங்கத்திடம் இருக்கிறதா? எனவும் ஜேர்மன் கேள்வி எழுபியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வறுமையை நீக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்ற கேள்வியையும் ஜேர்மன் முன்வைத்துள்ளது.

இதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக 2015 ஆம் ஆண்டு அரசாங்கம் வாக்குறுதி அளித்தாலும் அது ஏன் இன்னும் நிறைவேற்றப்படவில்லையென சுவிட்சர்லாந்து இலங்கை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.

காணாமற்போனோர் அலுவலகம் எப்போது செயற்பாட்டிக்கு வரும்? எனவும் சுவிட்சர்லாந்து இலங்கையிடம் மேலும் வினவியுள்ளது.

காலக்கிரம மீளாய்வு பொறிமுறையின் கீழ் ஐக்கிய நாடுகளில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து நாடுகளினதும் மனித உரிமை விவகாரங்கள் ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் மூன்று செயற்குழு அமர்வின் போது மீளாய்வு செய்யப்படுகிறது.

அதன் பிரகாரம் வருடமொன்றில் 42 நாடுகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்படுகிறது.

அந்த வகையில் இலங்கையின் மனித உரிமை நிலமை தொடர்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் முதலாவது தடவையாகவும், 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாவது தடவையாகவும் மீளாய்வு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்