1996 இல் நாவற்குழியில் 24 பேர் கைது: யாழ். மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்

1996 இல் நாவற்குழியில் 24 பேர் கைது: யாழ். மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்

1996 இல் நாவற்குழியில் 24 பேர் கைது: யாழ். மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்

எழுத்தாளர் Bella Dalima

15 Nov, 2017 | 8:40 pm

1996 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 19 ஆம் திகதி நாவற்குழி மரவன்புலவு எனும் இடத்தில் நாவற்குழி இராணுவ முகாம் பொறுப்பதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் துமிந்த கெப்பெட்டிபொலான தலைமையில் 24 பேர் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டதாகத் தெரிவித்து யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டு வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்ட 24 பேரில் மூவரது உறவினர்கள் இந்த ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி சுபாஜினியுடன் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் ஆஜராகியிருந்தார்.

இந்த ஆட்கொணர்வு மனுவை சர்வதேச சட்டத்திற்கு அமையவும், இலங்கை உள்நாட்டு நீதிமன்ற தீர்ப்புக்களின் அடிப்படையிலும் தாம் தாக்கல் செய்துள்ளதாக சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இந்த மனுவை ஏற்றுக்கொண்டு பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை உத்தரவை பிறப்பிக்குமாறு சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வலிந்து காணாமற்போகச் செய்தல் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டத்தின் படி மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச்செயலாகும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய நாடுகளின் ருவாண்டா யுத்தக்குற்ற விசாரணை நீதிமன்றம், ஐக்கிய நாடுகளின் யூகோஸ்லாவாகியா யுத்தக்குற்ற விசாரணை நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களின் தீர்ப்புக்களின் படியும் வலிந்து காணாமற்போகச் செய்தல் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச்செயல் என குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆட்கொணர்வு மனுவையும் சட்டத்தரணியின் வாதங்களையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், முதலாம் பிரதிவாதியான லெப்டினன்ட் கேர்ணல் துமிந்த கெப்பெடிபொலான மற்றும் இரண்டாம் பிரதிவாதியான தற்போதைய இராணுவத் தளபதி ஆகியோரை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளா்.

அத்துடன், சட்ட மா அதிபருக்கும் அழைப்புக்கட்டளை அனுப்பி வைக்குமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்