யாழில் பல்வேறு பகுதிகளில் வாள்வெட்டுத் தாக்குதல்கள்: 7 பேர் காயம்

யாழில் பல்வேறு பகுதிகளில் வாள்வெட்டுத் தாக்குதல்கள்: 7 பேர் காயம்

எழுத்தாளர் Bella Dalima

15 Nov, 2017 | 8:24 pm

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல்களில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவின் சங்குவேலிப் பகுதியில் நேற்றிரவு 7.30 மணியளவில் வாள்வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

கட்டாரில் பணிபுரிந்து மூன்று மாத விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்த ஒருவர் வாள்வெட்டில் காயமடைந்துள்ளார்.

பணி நிமித்தம் மீண்டும் கட்டாருக்கு செல்வதற்காக அவர் தயாராகிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த சிலர் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அவரை அழைத்துச் செல்வதற்காக வெளியில் காத்திருந்த முச்சக்கரவண்டியின் சாரதியும் இதன்போது வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

வெளிநாட்டிற்கு செல்லவிருந்தவரின் மகனும் உறவினரொவரும் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முடமாவடி பகுதியில் நேற்றிரவு 8 மணியளவில் மற்றுமொரு வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது.

வீடொன்றிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத சிலர், அங்கிருந்த இருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் இதன்போது இருவர் காயமடைந்துள்ளனர்.

வீட்டிற்குள் இருந்த மின் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களையும் அங்கு சென்ற குழுவினர் சேதப்படுத்தியுள்ளனர்.

வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளொன்றும் களவாடப்பட்டுள்ளது.

இதேவேளை, கோப்பாய் பொலிஸ் பிரிவின் கோண்டாவில் பகுதியிலுள்ள ஹோட்டலொன்று நேற்றிரவு சேதமாக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு 08.30 மணியளவில் மோட்டார் சைக்கிள்களில் அங்கு சென்ற சிலர் ஹோட்டலை சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் ஹோட்டலில் கடமையாற்றிக் கொண்டிருந்தவர்கள் பின்பக்கமாகத் தப்பியோடியுள்ளனர்.

குருநகரில் மூன்று நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட வாள்வெட்டில் காயமடைந்தவரே இந்த ஹோட்டலின் உரிமையாளர் என நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

அன்றைய தினம் பதிவான சிசிடிவி காணொளிகளும் வெளியாகியிருந்தன.

இதேவேளை, மானிப்பாய் பொலிஸ் பிரிவின் ஆணைக்கோட்டை ஆறுகால் மடம் பகுதியில் மற்றுமொரு வாள்வெட்டு நேற்றிரவு பதிவானது.

வீதியால் சென்றுகொண்டிருந்த ஒருவர் மீது, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த சிலர் வாள்வெட்டு நடத்தியுள்ளதுடன் இதன்போது ஒருவர் காயமடைந்துள்ளார்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவின் நவாலி பகுதியிலும் வீடொன்றினுள் நுழைந்த சிலர் பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.

வாள்வெட்டு சம்பவங்களில் காயமடைந்தோர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்கை பெற்று வருகின்றனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்