சிம்பாப்வேயில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது இராணுவம்

சிம்பாப்வேயில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது இராணுவம்

சிம்பாப்வேயில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது இராணுவம்

எழுத்தாளர் Bella Dalima

15 Nov, 2017 | 3:54 pm

ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது. 1980 ஆம் ஆண்டு முதல் அதிபராக இருக்கும் முகாபே மற்றும் அவரது குடும்பத்தினர் பத்திரமாக உள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

சிம்பாப்வேயில் ராபர்ட் முகாபே (93) 1980 ஆம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வருகிறார்.

அதிகாரத்தை தனது வசம் கொண்டு வர முயற்சிப்பதாகக் கூறி அந்நாட்டு துணை அதிபர் எமர்சன் நாங்காவாவை கடந்த வாரம் முகாபே பதவி நீக்கம் செய்தார்.

இதனால், ஆளும் ஷானு – பி.எஃப் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இராணுவத் தலைமை தளபதி ஜெனரல் சிவெங்கா, நீக்கப்பட்ட துணை அதிபர் நாங்காவாவுக்கு ஆதரவாக நின்றார். இதனால், அந்நாட்டு அரசியலில் குழப்பநிலை ஏற்பட்டது.

இந்நிலையில், உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை தலைநகர் ஹரரேவை இராணுவப் பீரங்கிகள் சுற்றி வளைத்தன. அதிகளவிலான இராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் தலைநகரை சுற்றி குவிக்கப்பட்டிருந்தனர். அந்நாட்டு அரச ஊடகத் தலைமையகத்தையும் இராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.

பாராளுமன்றம் உட்பட அனைத்து அரச அலுவலகங்களையும் படிப்படியாக இராணுவம் முற்றுகையிட்டு, தன்வசம் கொண்டு வந்தது. அதிபர் மாளிகையை எப்போது வேண்டுமானாலும் இராணுவம் முற்றுகையிடலாம் என்ற நிலை நீடித்து வந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

‘அரசைக் கைப்பற்றும் நோக்கமில்லை’ என இராணுவ செய்தி தொடர்பாளர் முன்னர் கூறியிருந்தார். குற்றவாளிகளை மட்டுமே இராணுவம் குறிவைத்துள்ளது எனவும் தெரிவித்திருந்தார். அதிபர் முகாபே மற்றும் அவரது குடும்பத்தினர் இராணுவத்தின் கண்காணிப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, ‘இரத்தம் சிந்தாமல் நடைபெற்ற மாற்றம்’ என ஆளும்கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

சிம்பாப்வேயில் குழப்பமான சூழ்நிலை நிலவுவதால், தங்களது நாட்டவர்கள் வெளியே செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படி அமெரிக்க மற்றும் பிரிட்டன் தூதரகங்கள் அறிவுறுத்தியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்