அண்மையில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பான ஆய்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

அண்மையில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பான ஆய்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2017 | 1:15 pm

அண்மையில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது.

அறிக்கை முழுமையாக தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் விசேட பணிகளுக்கான அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களான சரத் அமுனுகம, பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் அடங்கிய குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அண்மையில் நியமிக்கப்பட்டது.

இதேவேளை, அண்மையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படட போது டீசலை விநியோகிக்காத எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு அபராதத்தை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

மாவட்ட செயலாளர்களூடாக இவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்படுவதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே 38 மெட்ரிக் தொன் டீசலுடன் மற்றுமொரு கப்பல் இன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அந்த டீசல் மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருள் தாங்கிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 21 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளதாகவும் பெட்ரோலிய வளத்துறை அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்