வெலிக்கடை சிறைச்சாலை மோதலுடன் தொடர்புடையவர்களுக்கு தராதரம் பாராது தண்டனை வழங்கப்படும்

வெலிக்கடை சிறைச்சாலை மோதலுடன் தொடர்புடையவர்களுக்கு தராதரம் பாராது தண்டனை வழங்கப்படும்

எழுத்தாளர் Bella Dalima

10 Nov, 2017 | 3:28 pm

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடையவர்களுக்கு தராதரம் பாராது தண்டனை வழங்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தமது பதவிக் காலத்திலேயே சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அறிக்கையொன்றினூடாக அமைச்சர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

மோதல் சம்பவம் தொடர்பில் அடுத்த மாத இறுதிக்குள் பொலிஸாரின் அறிக்கையை தமக்கு வழங்குவதாக பொலிஸ் மா அதிபர் உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 27 கைதிகள் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்திருந்தனர்.

வெலிக்கடை சிறைச்சாலை மோதல் திட்டமிடப்பட்டவொன்று என தற்போதைய அரசாங்கம் அது தொடர்பில் ஆராய்வதற்காக நியமித்த மூவரடங்கிய குழு தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவே, வெலிக்கடை சிறைச்சாலைக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை அனுப்புவதற்கு ஆலோசனை வழங்கியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்