நடராஜா ரவிராஜின் 11 ஆவது நினைவு தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது

நடராஜா ரவிராஜின் 11 ஆவது நினைவு தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது

எழுத்தாளர் Bella Dalima

10 Nov, 2017 | 8:20 pm

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 11 ஆவது நினைவு தின நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ். சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன், தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க. அருந்தவபாலன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட நடராஜா ரவிராஜ் , சாவகச்சேரி டிரிபேர்க் கல்லூரி மற்றும் யாழ். பரியோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக கடமையேற்றார்.

சட்டத்தரணியாக இருந்து பின்னர் அரசியலுக்குள் பிரவேசித்தார்.

1987 ஆம் ஆண்டு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணைந்த ரவிராஜ், 1990 ஆம் ஆண்டு அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார்.

1997 ஆம் ஆண்டு யாழ். மாநகர சபை பிரதி முதல்வராகவும், 1998 இல் யாழ். மாநகர சபை முதல்வராகவும் தெரிவானார்.

2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தென்மராட்சி பகுதியில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார்.

2006 நவம்பர் 10 ஆம் திகதி காலை 8:45 அளவில் கொழும்பு நாரஹென்பிட்டிய – மனிங்டவுனில் உள்ள அவரது வீட்டின் அருகில் அடையாளந்தெரியாதோரால் அவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி காலை 9.20 அளவில் உயிரிழந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்