தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வதில் உள்ள தடை என்ன?

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வதில் உள்ள தடை என்ன?

எழுத்தாளர் Bella Dalima

10 Nov, 2017 | 6:37 pm

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து யாரும் வௌியேறலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் அண்மையில் ஊடகங்கள் மூலம் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில், தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படமுடியாது என EPRLF தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமான உதய சூரியன் சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு அங்கத்துவக் கட்சிகள் இணங்கின.

எனினும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, 2004 ஆம் ஆண்டு தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வீட்டுச்சின்னத்தில் தேர்தலில் களமிறங்க தீர்மானித்தன.

ஆயுதப்போராட்டம் 2009 ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்டதன் பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆதிக்கம் மேலோங்கியதையடுத்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பிரிந்து சென்றது.

அதனையடுத்து புளொட், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்கியது.

கூட்டமைப்பு என்கின்ற அடையாளத்தினூடு, வேறு கட்சிகள் ஆளுமை பெறுவதையோ வீட்டுச் சின்னத்தின் மூலம் பெற்றிருக்கின்ற பிடியை விடுவதையோ தமிழரசுக் கட்சி விரும்பவில்லை.

இதன் காரணமாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பினை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கான பலதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும் அதனை இலங்கை தமிழரசுக் கட்சி தட்டிக்கழித்து வருவதாக அங்கத்துவக் கட்சிகள் தெரிவிக்கின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வது தொடர்பான உடன்படிக்கையில் தமிழரசுக் கட்சி கைச்சாத்திட முன்வந்த சந்தர்ப்பத்தில்,
கூட்டுக் கட்சிகள் அதனைத் தாமதப்படுத்தியதால், அந்த உடன்படிக்கை நடைமுறைக்கு வரவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கடந்த ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி தெரிவித்திருந்தார்.

தற்போது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை பொருத்தமானதாக இருக்கும் என நம்புவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்ய வேண்டும் என்பதே அதன் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான TELO வின் நிலைப்பாடு என அதன் தலைவர்
செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வது தொடர்பில் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக EPRLF தலைவர் சுரேஸ் பிரேச்சந்திரன் குறிப்பிட்டார்.

இந்நிலையில், தமிழர் ஒற்றுமைக்காக உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில், இலங்கை தமிழரசுக் கட்சி ஏகோபித்து செயற்படுவது தொடர்பில் மக்கள் அதிருப்தி வௌியிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்