யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான   குடியிருப்புகளை நிர்மாணிக்க மேலதிக நிதி ஒதுக்கீடு

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான  குடியிருப்புகளை நிர்மாணிக்க மேலதிக நிதி ஒதுக்கீடு

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான  குடியிருப்புகளை நிர்மாணிக்க மேலதிக நிதி ஒதுக்கீடு

எழுத்தாளர் Bella Dalima

09 Nov, 2017 | 6:54 pm

நாட்டின் கடன் சுமையைக் குறைத்து அபிவிருத்தியை இலக்காகக்கொண்ட நல்லாட்சி அரசாங்கத்தின் 2018 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டாலும் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை இன்னமும் வெற்றிகொள்ள முடியாமற்போயுள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்கமைய, நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்காக மேலதிக நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களால் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு குறைந்த வட்டியில் வடக்கு மற்றும் வட மத்திய மாகாண மக்களுக்கு கடன் வசதிகளைப் பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீடுகளை நிர்மாணிப்பதற்கு 3000 மில்லியன் ரூபாவை இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

மலையக மக்களின் குடியிருப்புப் பிரச்சினைகளுக்கு தீர்வாக 5000 வீடுகளைக் கட்டுவதற்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நவீன பொருளாதார மத்திய நிலையமொன்றை அமைப்பதற்கான யோசனையை முன்வைத்த நிதியமைச்சர், போரினால் கணவரை இழந்த பெண்களுக்கான உதவித்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

வடக்கில் இருந்து வௌியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை இந்த வருடத்திற்குள் செயற்படுத்துவதற்கு ஏதுவாக 1.4 பில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதேவேளை, மதுபானம் மீது அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியில் இருந்து தேச நிர்மாண வரியை விதிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

நவீன பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைக்கவும் வரவு செலவுத் திட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் கடலட்டை ஏற்றுமதி தொழிலில் ஈடுபடும் தனியாருக்கு அரசாங்கத்தினால் காணிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்