நாற்பதாயிரம் மெட்ரிக் தொன் பெட்ரோல் தாங்கிய கப்பல் இன்று நாட்டிற்கு வருகை

நாற்பதாயிரம் மெட்ரிக் தொன் பெட்ரோல் தாங்கிய கப்பல் இன்று நாட்டிற்கு வருகை

எழுத்தாளர் Staff Writer

08 Nov, 2017 | 7:42 am

40,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் தாங்கிய கப்பலொன்று இன்றிரவு நாட்டை வந்தடையவுள்ளது.

இந்தக் கப்பல் வந்தடைந்ததும் நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு முழுமையான தீர்வு காணப்படும் என பெட்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 11 ஆம் திகதி பெட்ரோல் தாங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது.

குறித்த கப்பல் 15,000 மெட்ரிக் தொன் பெற்றோலுடன் வரவுள்ளது.

இந்த இரண்டு கப்பல்களிலும் கொண்டுவரப்படும் பெற்றோல் அடுத்த 20 நாட்களுக்கு போதுமானது என பெட்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாட்டுக்கு வரவிருக்கும் பெட்ரோலின் தரம் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டால் எவ்வாறான நிலை உருவாகும் என உபாலி மாரசிங்கவிடம் நாம் வினவினோம்.

பெட்ரோலின் தரம் தொடர்பில் ஏற்கனவே ஆராயப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் அச்சமடைய தேவையில்லையெனவும் அவர் கூறினார்.

இதனிடையே நாட்டின் பல பகுதிகளில் நேற்றிரவு வரை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் வாகன சாரதிகள் காத்திருந்தனர்.

இதேவேளை, வாகனங்களுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிக்குமாறு விதிக்கப்பட்ட பணிப்புரை மீளப்பெறப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்