குருநாகலில் நியூஸ்பெஸ்ட் செய்தியாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்தவருக்கு விளக்கமறியல்

குருநாகலில் நியூஸ்பெஸ்ட் செய்தியாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்தவருக்கு விளக்கமறியல்

குருநாகலில் நியூஸ்பெஸ்ட் செய்தியாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்தவருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Bella Dalima

07 Nov, 2017 | 8:08 pm

குருநாகல் நகரில் ஒருவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு நியூஸ்பெஸ்ட் பிராந்திய செய்தியாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குருநாகல் நகரிலுள்ள இறுவெட்டு (CD) விற்பனை நிலையத்திற்கு சென்றிருந்தவர் மீது அதன் உரிமையாளர் நேற்று (06) தாக்குதல் நடத்தியிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக அங்கு சென்றிருந்த நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் A.W.M. ஃபஸ்லானுக்கு இடையூறு விளைவித்தவர் அவரது உடைமைகளுக்கும் சேதம் விளைவித்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான நபரும் நியூஸ்பெஸ்ட் பிராந்திய செய்தியாளரும் இரு வேறு முறைப்பாடுகளை குருநாகல் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்டிருந்தனர்.

இதற்கமைய, குறித்த இறுவெட்டு விற்பனை நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது அவரை இம்மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குள்ளான குருநாகல் – உக்கமுவ, மாதொட்டை பகுதியைச் சேர்ந்த 42 வயதான H.A.D. ஜோசப் உபாலி ஹேரத் என்பவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்