தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து நீடிக்குமா?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து நீடிக்குமா?

எழுத்தாளர் Bella Dalima

07 Nov, 2017 | 7:03 pm

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து நீடிக்குமா என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அது குறித்து கூட்டமைப்பின் உறுப்புக்கட்சிகளிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

புதிய அரசியலமைப்பு விவகாரம் உள்ளிட்ட பல விடயங்களில் இலங்கை தமிழசுக் கட்சி தான்தோன்றித்தனமாக தீர்மானம் எடுப்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி குற்றம் சுமத்தி வந்தது.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அந்தக் கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் பல தடவைகள் கோரியும் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

இந்தப் பின்புலத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தாம் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடப் போவதில்லையென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கடந்த சனிக்கிழமை (04) அறிவித்தது.

இது குறித்து கூட்டமைப்பின் ஏனைய உறுப்புக்கட்சிகளிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, அந்த தீர்மானம் வருத்தமளிப்பதாகவும் அது தொடர்பில் சம்பந்தன் உள்ளிட்ட தலைமை விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

இதேவேளை, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பிரிந்து செல்வது அவர்களின் தனிப்பட்ட தீர்மானம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்