ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை: இரண்டாம் நாள் சாட்சிப்பதிவுகள் இடம்பெற்றன

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை: இரண்டாம் நாள் சாட்சிப்பதிவுகள் இடம்பெற்றன

எழுத்தாளர் Bella Dalima

07 Nov, 2017 | 8:55 pm

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பிலான வழக்கின் உண்மை விளம்பல் விசாரணையின் இரண்டாம் நாள் சாட்சிப் பதிவுகள் இன்று இடம்பெற்றன.

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.யூ.எம். இஸர்டீன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

ஏனைய பிரதிவாதிகளான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பிரதீப் மாஸ்டர் என்றழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா என்றழைக்கப்படும் கனநாயகம், இராணுவப் புலனாய்வு உறுப்பினர் எம். கலீல் மற்றும் வினோத் எனப்படும் வெலிகந்த பகுதியைச் சேர்ந்த மதுசங்க ஆகியோரும் இன்று மன்றில் ஆஜராகியிருந்தனர்.

வழக்கின் 16 ஆவது சாட்சியாளரான மட்டக்களப்பு மாவட்ட நீதவான் ஏ.எல்.எம். அப்துல்லா இரண்டாவது நாளாக இன்றும் சாட்சியமளித்திருந்தார்.

நேற்றைய விசாரணையின் போது அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட, மட்டக்களப்பு மாவட்ட நீதவான் முன்னிலையில் தட்டச்சாளர்களாகப் பணிபுரிந்த இருவரும் இன்று பிற்பகல் மன்றில் ஆஜராகி சாட்சியமளித்திருந்தனர்.

முதலாம் மற்றும் இரண்டாம் இலக்க பிரதிவாதிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட விதம் தொடர்பில் இவர்களிடம் வினவப்பட்டது.

சாட்சிய நிறைவினை அடுத்து எதிர்வரும் ஜனவரி மாதம் 3 மற்றும் 4 ஆம் திகதிகளுக்கும் 8 மற்றும் 9 ஆம் திகதிகளுக்கும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

8 பேருக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் மன்றில் ஆஜராக வேண்டும் என நீதிபதி அழைப்பாணை விடுத்துள்ளார்.

இதேவேளை, சந்தேகநபர்களை ஜனவரி மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்