பெட்ரோலுக்காக நீண்ட வரிசை: தம்மீதான குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்கிறது LIOC

பெட்ரோலுக்காக நீண்ட வரிசை: தம்மீதான குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்கிறது LIOC

எழுத்தாளர் Bella Dalima

07 Nov, 2017 | 8:28 pm

பெட்ரோல் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், இன்றும் எரிபொருள் நிலையங்கள் அருகில் நீண்ட வரிசையைக் காண முடிந்தது.

கொலன்னாவை, முத்துராஜவெல மற்றும் சப்புகஸ்கந்த களஞ்சியசாலைகளில் இருந்து எரிபொருள் பௌசர்கள் பல பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

எனினும், LIOC நிறுவனத்தின் பெரும்பாலான எரிபொருள் நிலையங்கள் இன்றும் மூடப்பட்டிருந்தன.

நாட்டின் சந்தையின் 16 வீத தேவையைப் பூர்த்தி செய்யும் தமது நிறுவனத்திடம் போதியளவான எரிபொருள் காணப்படுவதாக அந்த நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றது என தற்போது அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய கப்பலிலுள்ள எரிபொருளை சுத்திகரித்து வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச முறையின் ஊடாக யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும், ஏதோவொரு காரணத்தினால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுத்திகரிக்காது இந்த எரிபொருளைப் பெற்றுக்கொள்ளுமாறு அழுத்தம் விடுத்ததாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என LIOC நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 10 ஆம் திகதி இலங்கையை அண்மிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

எவ்வாறாயினும், தரமற்ற எரிபொருளைக் கொண்டு வந்ததாகக் கூறப்படும் கப்பல், திருகோணமலை துறைமுகத்திற்கு அப்பால் இன்றும் நங்கூரமிடப்பட்டிருந்தது.

இந்த கப்பலில் உள்ள தரமற்ற எரிபொருளை இறக்குவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக பெட்ரோலிய தொழிற்சங்கங்கள் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்