ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை: வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை: வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை: வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

06 Nov, 2017 | 9:13 pm

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேல் நீதிமன்ற நீதிபதி எம்.யூ.எம். இஸர்டீன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது.

படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

ஏனைய பிரதிவாதிகளான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பிரதீப் மாஸ்டர் என்றழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஷ்ணானந்தராஜா, கஜன் மாமா என்றழைக்கப்படும் கனநாயகம், இராணுவப் புலனாய்வு உறுப்பினர் எம்.கலீல் மற்றும் வினோத் எனப்படும் வெலிகந்த பகுதியைச் சேர்ந்த மதுசங்க ஆகியோரும் இன்று மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இந்த வழக்கின் ஆறாம், ஏழாம் இலக்க பிரதிவாதிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் அவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாகவும் மன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 10.30 அளவில் வழக்கு விசாரணை ஆரம்பமானபோது சட்ட மா அதிபர் திணைக்களத்தினரால் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது.

இந்த குற்றப்பத்திரிகையில் ஐந்து பிரதிவாதிகள் மீதும் தலா ஐந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

முன்னாள் மட்டக்களப்பு நீதவான் ஏ.எல்.எம். அப்துல்லாவிடம் அரச தரப்பு சட்டத்தரணியால் விசாரணை நடத்தப்பட்டு இன்று சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

வழக்கின் முதலாம் மற்றும் இரண்டாம் இலக்க பிரதிவாதிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டமை குறித்து இதன்போது நீதவான் விளக்கமளித்துள்ளார்.

இன்று பிற்பகல் நீதவான் ஏ.எல்.எம். அப்துல்லாவிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை நாளையும் நடைபெறவுள்ளது.

2005 ஆம் ஆண்டு நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது மட்டக்களப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் உயிரிழந்தார்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளின் போது பிள்ளையான் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்