சுவிஸ் குமார் தப்பிச்செல்ல உதவி: மாவை சேனாதிராசாவிடம் விசாரணை

சுவிஸ் குமார் தப்பிச்செல்ல உதவி: மாவை சேனாதிராசாவிடம் விசாரணை

எழுத்தாளர் Bella Dalima

06 Nov, 2017 | 7:32 pm

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ் குமார் தப்பிச்செல்ல உதவிய சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக தமிழரசுக் கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவிடமும் சுமார் இரண்டு மணித்தியாலம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

சுவிஸ் குமாருக்கு பாதுகாப்பு வழங்கியதாக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவிற்கு எதிராக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.

இந்த வழக்கு விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2015 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி புங்குடுதீவு சர்வோதய மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது சுவிஸ் குமார் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் தப்பிச் செல்ல முயல்வதாக மக்கள் தெரிவித்திருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவும் கலந்துகொண்டிருந்தார்.

இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு சென்று சுமார் இரண்டு மணித்தியாலங்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் மேலும் பலரிடமும் விசாரணைகளை நடத்துவதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

வித்தியா படுகொலை வழக்கின் குற்றவாளியான சுவிஸ் குமார் ஏற்கனவே யாழ். பொலிஸ் நிலையத்திலிருந்து கொழும்பிற்கு தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

புங்குடுதீவில் மாணவி சிவலோகநாதன் வித்தியா கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ். மேல் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நடைபெற்ற தொடர் விசாரணைகளை அடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி 7 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் சுவிஸ் குமார் என்றழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமாரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்