மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி பலாலி தெற்கு மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி பலாலி தெற்கு மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2017 | 8:08 pm

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சொந்த மண்ணிலிருந்து இடம்பெயர்ந்துள்ள தம்மை மீள்குடியமர்த்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் ,பலாலி தெற்கு மக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வசாவிளான் கிராமிய முன்னேற்ற சங்கத்திற்கு அருகில் அமைதிப் பேரணியை ஆரம்பித்த மக்கள் வசாவிளானில் அமைந்துள்ள இராணுவ குடியிருப்பு வரை சென்றனர்.

இந்த அமைதிப் பேரணியில் வசாவிளான் ,பலாலியைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன் இந்த அமைதிப் பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் கலந்து கொண்டிருந்தார்.

அமைதிப் பேரணியில் ஈடுபட்டவர்கள் யாழ். இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர்.

இந்த மகஜரின் பிரதி ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக காணி விடயங்கள் தொடர்பிலான மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனை தொடர்பு கொண்டு வினவினோம்.

பலாலி விமான நிலையம் உள்ளடங்கலாக 4200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் 8,000 குடும்பங்கள் காணி விடுவிப்பு தொடர்பில் பதிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்