சைட்டம் பிரச்சி​னை: முன்மொழிவுகளுக்கு பல்கலைக்கழக உபவேந்தர்கள் வரவேற்பு

சைட்டம் பிரச்சி​னை: முன்மொழிவுகளுக்கு பல்கலைக்கழக உபவேந்தர்கள் வரவேற்பு

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2017 | 5:27 pm

சைட்டம் நிறுவனம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு முன்வைத்துள்ள முன்மொழிவுகளை, பல்கலைக்கழக உபவேந்தர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்த முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கையை கடந்த மாதம் 29 ஆம் திகதி அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் விடுத்திருந்தார்.

இந்த அறிவித்தலை நீண்ட பரிசீலனைக்கு உட்படுத்தியபோது அந்த முன்மொழிவுகள் சாதகமானதும் நம்பிக்கையூட்டக்கூடியதுமாக அமைந்திருந்ததென 15 உபவேந்தர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச பல்கலைக்கழகங்களில் அனைத்து மருத்துவ மாணவர்களும் அவர்களது கற்கை மற்றும் மருத்துவப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான நம்பிக்கையூட்டும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் மாணவர்கள் உடனடியாக கற்கை நடவடிக்கைகளுக்கு திரும்ப வேண்டும் என பல்கலைக்கழக உபவேந்தர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த பல மாதங்களாக மருத்துவப் பீடங்களின் அனைத்து கற்கை நடவடிக்கைகளிலும் மாணவர்கள் கலந்துகொள்ளாததால் நாட்டின் சுகாதாரத் துறைக்கு ஏற்பட்ட பாதகமான தாக்கங்கள் மற்றும் மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் தொடர்பில் எழுந்துள்ள உறுதிப்பாடற்ற தன்மையை ஆழமாகக் கவனத்தில் எடுத்துக்கொண்டதன் பின்னர் உபவேந்தர்கள் இந்த அறிவித்தலை விடுப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்