சாய்ந்தமருது, கல்முனையில் ஹர்த்தால்: கவலையடைவதாக ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

சாய்ந்தமருது, கல்முனையில் ஹர்த்தால்: கவலையடைவதாக ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2017 | 9:16 pm

அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பகுதிக்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தை நிறுவுமாறு வலியுறுத்தி மூன்று நாட்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் அதுகுறித்து அரசியல்வாதிகள் எவரும் கவனம் செலுத்தவில்லையென மக்கள் தெரிவித்தனர்.

சாய்ந்தமருதில் இன்று மூன்றாவது நாளாக ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

கடைகள் பூட்டப்பட்டு, கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

இதேவேளை, 1986 ஆம் ஆண்டிற்கு முன்பு இருந்த நான்கு கிராம சபைகளை மீண்டும் உருவாக்குமாறு கல்முனை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரைவாகு வடக்கு, கரைவாகு மேற்கு, கரைவாகு தெற்கு மற்றும் கல்முனை நகர சபை என்ற முறைக்கு செல்லுமாறு கல்முனைக்குடி மக்கள் கோருகின்றனர்.

அதனை வலியுறுத்தி இன்று கல்முனை பகுதியிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

கல்முனையில் இன்று வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன், போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்து பிரதேசம் வெறிச்சோடிக்காணப்பட்டது.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்தார்.

இதன்போது, சாய்ந்தமருது, கல்முனை மக்களின் பிரச்சினை தொடர்பில் தாம் கவலையடைவதாகவும் அரசியல் தலைவர் என்ற வகையில் தாமும் பொறுப்பாளி எனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்