ஜனாதிபதியின் தென் கொரிய விஜயம்: முதலீட்டை அதிகரிக்க வர்த்தகர்களுடன் கலந்துரையாடல்

ஜனாதிபதியின் தென் கொரிய விஜயம்: முதலீட்டை அதிகரிக்க வர்த்தகர்களுடன் கலந்துரையாடல்

By Bella Dalima

30 Nov, 2017 | 3:36 pm

தென் கொரியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டிலுள்ள முன்னணி வர்த்தகர்களை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இந்த விசேட சந்திப்பில் இலங்கையிலுள்ள முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் சிலரும் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தென் கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கிழக்காசிய பிராந்தியத்தின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தென் கொரிய பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த கலந்துரையாடலின் போது வரவேற்புரையாற்றிய கொரியாவின் KBIZ நிறுவனத்தின் தலைவர், முதலீட்டுக்கான சிறந்த நாடாக இலங்கை விளங்குவதாகக் கூறியுள்ளார்.

இதன் காரணமாக இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்வருமாறு ஏனைய நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த விசேட சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் மலிக் சமரவிக்ரம நாட்டில் முன்னெடுக்கக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பிலும், அவற்றிற்கு இலங்கை அரசினால் வழங்கப்படும் சலுகைகள் தொடர்பிலும் வர்த்தகர்களுக்கு தௌிவுபடுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.