சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு எழுதிய கடிதத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார் சி.வி. விக்னேஷ்வரன்

சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு எழுதிய கடிதத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார் சி.வி. விக்னேஷ்வரன்

சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு எழுதிய கடிதத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார் சி.வி. விக்னேஷ்வரன்

எழுத்தாளர் Bella Dalima

31 Oct, 2017 | 8:11 pm

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன், முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் சிறைக்கைதிகள் தொடர்பில் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 16 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு தாம் கடிதம் எழுதியதாகவும் பதில் கடிதம் கிடைக்காமையால் அந்த கடிதத்தினை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்துவதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் இந்த மூவரதும் வழக்கை வவுனியாவிலிருந்து அநுராதபுரத்திற்கு மாற்றியது வழக்கின் சாட்சிகளுக்கு பாதுகாப்பளிப்பதற்காக அல்லவென தெரிவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு அவர்களை குற்றவாளிகளாகக் காண்பதே அரச தரப்பின் நோக்கம் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் குறிப்பிட்ட சம்பவம் இடம்பெற்றதை உறுதிப்படுத்துவதற்கு ஆதரவாக இன்னுமொரு அனுசரணை சாட்சியத்தின் அவசியத்தை தான் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த காலத்தில் நாகமணி வழக்கில் வலியுறுத்தியிருந்தமையையும் கடிதத்தில் அவர் ஞாபகப்படுத்தியுள்ளார்.

வடக்கில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள நிலையில், பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு வழக்கின் சாட்சிகளை வவுனியாவிலிருந்து அனுராதபுரத்திற்கு மாற்றுவது வேடிக்கையானது எனவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மூன்று சாட்சியாளர்களில் எவரும் பாதுகாப்பு வழங்கும்படி கேட்டதாகவோ அல்லது அவர்கள் இலங்கையில் இப்பொழுது இருப்பதாகவோ தெரியவில்லை எனவும் தனது கடிதத்தில் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

சாட்சியாளர்கள் சட்ட மா அதிபரிடமிருந்து பாதுகாப்புக் கோரியிருந்தால் அதற்கான ஆவணத்தின் வகையை சட்ட மா அதிபர் பகிரங்கமாக வெளியிட வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணை ஆரம்பமாவதற்கு முன்னரே ருவன் விஜேவர்தன உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளை விடுதலைப்புலிகள் என முத்திரை குத்தியதுடன், விசாரணைக்கு முன்பே அவரது கூற்று கண்ணியமற்ற பொறுப்பற்ற தன்மையைக் காட்டுவதாக அமைந்தது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் அவல நிலையை உணர்ந்து, இவ்விடயத்தில் தலையிட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் கட்டியெழுப்புவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உதவ வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் சி.வி. விக்னேஷ்வரன் கோரியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்