நேர்முகப் பரீட்சைக்கு அழைக்காமல்  புறக்கணிப்பு:  கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் குற்றச்சாட்டு

நேர்முகப் பரீட்சைக்கு அழைக்காமல்  புறக்கணிப்பு:  கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் குற்றச்சாட்டு

எழுத்தாளர் Bella Dalima

30 Oct, 2017 | 9:43 pm

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான போட்டிப் பரீட்சை அண்மையில் நடத்தப்பட்டது.

எனினும், இந்தப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுள் ஒரு தொகுதியினர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கான போட்டிப் பரீட்சை இம்மாதம் முதலாம் திகதி நடைபெற்றது.

இந்தப் பரீட்சையில் மும்மொழிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 6,880 பட்டதாரிகள் தோற்றியிருந்தனர்.

பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 2,868 பட்டதாரிகள் சித்தியடைந்துள்ளனர்.

எனினும், சித்தியடைந்தவர்களுள் ஒரு தொகுதியினர் மாத்திரமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, திருகோணமலையில் இன்று எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.

தாம் புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை, போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த போதிலும், நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்முனையிலுள்ள மனித உரிமை ஆணைக்குழுவிடம் வேலையற்ற பட்டதாரிகள் மகஜரொன்றையும் கையளித்தனர்.

கிழக்கு மாகாணத்தில் சுமார் 8,500 வேலையற்ற பட்டதாரிகள் தொழிலுக்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்