பல உயிர்களைக் காவு கொண்ட மீரியபெத்த மண்சரிவிற்கு இன்றுடன் 3 ஆண்டுகள் பூர்த்தி

பல உயிர்களைக் காவு கொண்ட மீரியபெத்த மண்சரிவிற்கு இன்றுடன் 3 ஆண்டுகள் பூர்த்தி

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2017 | 6:34 pm

பல உயிர்களை காவுகொண்டு இன்னும் சிலரை ஆதரவற்றவர்களாக்கிய கொஸ்லாந்த மீரியபெத்த மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி இன்று விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

2014 ஒக்டோபர் 29 ஆம் திகதி காலை கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியை உழுக்கிய மண் சரிவு முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது.

மண்சரிவில் சிக்கி 37 பேர் உயிரிழந்தனர்.

மீரியபெத்த தோட்டத்தில் மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டு மூன்று வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு, அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இன்று நினைவஞ்சலி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தோட்ட மக்களால் விசேட பூஜை வழிபாடுகளும் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை மண்சரிவு ஏற்பட்ட பின்னர் இரண்டு வருடங்களாக தேயிலைத் தொழிற்சாலைகளிலும், கூடாரங்களிலும் வாழ்ந்த மக்களுக்கு கடந்த வருடம் ஒக்டோபர் 22 ஆம் திகதி வீடுகள் வழங்கப்பட்ட போதிலும் வீட்டுக்கான உறுதிப்பத்திரங்களை இன்னும் வழங்க வில்லையென மக்கள் கவலை வௌியிடுகின்றனர்.

இதேவேளை மண்சரிவினால் பாதிக்க்பட்ட பலர் தமது ஜீவனோபாயத்திற்காகவும் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

அனர்த்தங்களின் போது மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு கெப்பிடல் மகாராஜா நிறுவனம் எவ்வேளையிலும் முன்நின்று செயற்படுகிறது.

அந்த வகையில் கொஸ்லாந்தை – மீரியபெத்த மண்சரிவில் அனர்த்தத்திற்குள்ளானவர்கள் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கும் சக்தி சிரச நிவாரண யாத்திரை மூலம் நிவாரணப் பொருட்கள் கையளிக்கப்பட்டன.

இதனிடையே, மீரியபெத்த அனர்த்தம் ஏற்பட்ட இன்றைய தினத்தை மலையக மக்களுக்கு காணி உறுதி வழங்கும் தினமான பிரகடனப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பண்டாரவளையில் இன்று கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.

சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மீரியபெத்த மக்களுக்கும் காணி உறுதிப்பத்திரத்தை விரைவில் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அத்துடன் மலையகத்தின் பல பகுதிகளில் முகவரி இன்றி வாழும் மக்களுக்கு விரைவில் காணிகளை வழங்கி அவர்களுக்கான காணி உறுதிப் பத்திரங்களையும் வழங்க வேண்டும் என மக்களிடம் கையெழுத்து சேகரிக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்