சைட்டம் நிறுவனத்தை இரத்து செய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை

சைட்டம் நிறுவனத்தை இரத்து செய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2017 | 1:53 pm

சைட்டம் நிறுவன மருத்துவ பீடம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்வுகள் இன்று வௌியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய சைட்டம் நிறுவனத்தை இரத்து செய்வதற்கான பரிந்துரையை ஜனாதிபதி குழு முன்வைத்துள்ளது.

சைட்டம் நிறுவனத்தின் சொத்துக்கள், பொறுப்புக்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் இலாபத்தை இலக்காகக் கொள்ளாதா புதிய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தேச நிறுவனத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் விருப்பம் கொண்டுள்ள தரப்பினருடன் விரைவில் விரிவான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.

அனுமதி தகமைகளை பூர்த்தி செய்யும் அனைத்து மாணவர்களையும் புதிய நிறுவனம் ஏற்றுக் கொள்ள வேண்டுமெனவும் அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.

சைட்டம் நிறுவனத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ள மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் உயர் நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு இலங்கை மருத்துவ சபையின் ஆலோசனைக்கமைய தீர்க்கப்பட வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்த மாணவர்கள் அரச வைத்தியசாலைகளில் பயிற்சிகளைப் பெறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

சைட்டம் நிறுவனத்திற்கு புதிதாக மருத்துவ மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

உத்தேச புதிய நிறுவனத்தின் உரிமை அல்லது முகாமைத்துவத்துடன், சைட்டம் நிறுவனத்தின் தற்போதைய பங்குதாரர்கள் தொடர்புபடக்கூடாது என ஜனாதியால் நியமிக்கப்பட்ட குழு அறிவித்துள்ளது.

மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சி தொடர்பான குறைந்தபட்ச தர நிர்ணயங்கள் அடங்கிய வர்த்தமானி, சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அந்தப் பணிகள் ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட வேண்டுமெனவும் அந்தக் குழு முன்வைத்துள்ள பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்