கொஸ்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் நால்வர் உயிரிழப்பு

கொஸ்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் நால்வர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2017 | 7:32 pm

காலி, கொஸ்கொட பிரதேசத்தில் மூன்று இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகங்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

குருந்துகஹபியச, மெனிக்கம மற்றும் லேலிஹேத்துவ ஆகிய பகுதிகளில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகின.

லேலிஹேதுவ பகுதியில் இடம்பெற்ற முதலாவது துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் இரு மகன்மாரும் உயிரிழந்துள்ளனர்.

52 வயதான தந்தையும் 13 மற்றும் 20 வயதுகளுடைய மகன்களுமே உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கஜமுணி மஹிந்த ராஜா என்பவர் பலபிட்டிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினராவார்.

13 வயதான பாடசாலை மாணவரொருவருக்கு இதன்போது கடும் காயம் ஏற்பட்டுள்ளது.

தந்தையை கொல்வதே நோக்காக இருந்துள்ள போதிலும், அவர் வீட்டில் இன்மையால் மகன்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

கொஸ்கொட மெனிக்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 39 வயதான யூ.ஏ.கபில ரத்ன பெரேரா என்பவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வருகைதந்த ஆயுததாரிகள் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

ரி56 ரக துப்பாக்கி மற்றும் கை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

இரு பாதாள உலகக்கோஷ்டியினருக்கு இடையில் நிலவிய குரோதம் இதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவமொன்று இந்த துப்பாக்கிப்பிரயோகத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

கடந்த மே மாதம் எட்டாம் திகதி, களுத்துறை மாலிபென்ன தியஹொரடுவ பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில்,
கொஸ்கொட லொகு என்றழைக்கப்படுகின்ற நுவன் சாமர அபேசேகர கொல்லப்பட்டார்.

விருந்துபசாரமொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் வீடு திரும்பியவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் இருவர் காயமைடைந்தனர்.

இந்த கொலை தொடர்பில், மற்றமொரு பாதாள உலகக் கோஷ்டியின் தலைவரான கொஸ்கொட சுஜி என்றழைக்கப்படும் ஜகமுணி சுஜீவ சொய்சா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

நீண்ட காலம் நண்பர்களாகவிருந்த இருவரும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட ஆரம்பித்ததன் பின்னர்
எதிரிகளாயினர்.

இன்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டோர் கொஸ்கொட சுஜியுடன் தொடர்புபட்டவர்கள் என சந்தேகிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், டுபாயிலிருந்து இந்த குற்றத்தை வழிநடத்திய கொஸ்கொட சுஜீக்கு பல எதிரிகள் உள்ளனர்.

அதில், தெற்கு பாதாள உலகக் கோஷ்டியின் தலைவரான மயூஷ் முக்கியமானவராவார்.

இவரால் இதற்கு முன்னர் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல தாக்குதலில் பல சிறுவர்கள் கொல்லப்பட்டதுடன் சிலர் காயமடைந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்