அரியாலையில் உயிரிழந்த தாய் மற்றும் 3 குழந்தைகளின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன

அரியாலையில் உயிரிழந்த தாய் மற்றும் 3 குழந்தைகளின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2017 | 8:28 pm

நாட்டையே பெரும் சோகத்திற்குள்ளாக்கிய யாழ். அரியாலை சம்பவத்தில் உயிரிழந்த நால்வரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன.

பணக் கொடுக்கல் வாங்கல் மூலம் இறுதியில் பிஞ்சு குழந்தைகள் உட்பட ஒரு குடும்பமே பலியாகியானது.

யாழ். அரியாலை பகுதியில் 28 வயதான இளம் தாய் தனது நான்கு வயதான பெண் குழந்தைக்கும், இரண்டு மற்றும் ஒரு வயதான ஆண் குழந்தைகளுக்கும் நஞ்சு கொடுத்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருந்தார்.

இந்தப் பெண்ணின் கணவனும் கடந்த மாதம் மூன்றாம் திகதி தற்கொலை செய்து கொண்டிருந்தார்.

ஒருகோடியே 17 இலட்சம் ரூபா பணத்தை நெருக்கமான நண்பர் ஒருவருக்கு நம்பிக்கையின் அடிப்படையில் கொடுத்து ஏமாற்றம் அடைந்த காரணத்தினால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பின்புலத்திலே மன உளைச்சலுக்கு உள்ளான காரணத்தினாலும் கணவரின் பிரிவை தாங்க முடியாமலும் இந்த பெண் இதனை செய்துள்ளார்.

சம்பவத்திற்கு முன்னர் 28 வயதான இளம் தாய் இரண்டு கடிதங்களையும் எழுதியுள்ளார்.

தனது மரணத்திற்கு காரணம் இவர்கள் தான் எனக்குறிப்பிட்டு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அவர் எழுதிய கடிதம் பின்வருமாறு:

“ஒருகோடியே 17 இலட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து ஏமாந்த காரணத்தினால் 3/9/2017 அன்று எனது கணவர் தற்கொலை செய்து கொண்டார்.சக்கர நாட்காளியில் உட்காந்து எனது கணவன் வாழ்தால் அது கூட எனக்கு போதுமானது. பிள்ளைகளுக்காக வாழலாம் என்று நினைத்தால் கூட அப்பா எப்ப வருவார் என அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்னால் பதில் வழங்க முடியாது.”

இந்த தாயின் இறுதிக் கோரிக்கையின்படி அரியாலையிலுள்ள அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற கிரியைகளைத் தொடரந்து நால்வரினதும் பூதவுடல்கள் யாழ். செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டன.

பலரின் கண்ணீருக்கு மத்தியில் தாயின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டதுடன், பிள்ளைகள் மூவரினதும் பூதவுடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்