அரியாலை துப்பாக்கிச் சூடு: விசாரணைகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிப்பு

அரியாலை துப்பாக்கிச் சூடு: விசாரணைகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Oct, 2017 | 7:01 pm

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பான விசாரணைகளை இன்று (28) முதல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொள்வார்கள் என யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜித குணரட்ண தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இதுவரையில் யாழ். பிரதி பொலிஸ் மாஅதிபரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

எனினும் இதுவரையில் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை.

யாழ்ப்பாணம் அரியாலை மணியன் தோட்டத்தைச் சேர்ந்த 24 வயதான டொன் பொஸ்கோ றிக்மன் என்ற இளைஞன் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

தனது நண்பனுடன் உதயபுரம் முதலாம் குறுக்குத் தெருவில் மோட்டார் சைக்கிளின் பின் புறமாக அமரந்து பயணித்த போது இவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது படுகாயமடைந்த பொஸ்கோ றிக்மன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டு காயத்தினால் ஏற்பட்ட அதிக குருதிப் போக்கே இவரது மரணத்திற்கு காரணம் என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்