தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய பெயர் மாற்றம்: எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய பெயர் மாற்றம்: எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

எழுத்தாளர் Bella Dalima

27 Oct, 2017 | 8:54 pm

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயரை மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

ஹட்டனில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் ”பூல் பேங்க் தொழிற்பயிற்சி நிலையம்” என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மூன்றாவது நாளாக இன்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

பொகவந்தலாவை நகரில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, பொகவந்தலாவை நகரின் ஊடாக போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக மாற்றுவழிப்பாதை பயன்படுத்தப்பட்டதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கவனயீர்ப்புப் பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.

தலைநகர் வாழ் தமிழ் மக்களின் ஏற்பாட்டில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவும் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவளை, பண்டாரவளை நகரிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

1990 ஆம் ஆண்டு தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் என பெயரிடப்பட்ட பயிற்சி நிலையத்தினை பூல் பேங்க் தொழிற்பயிற்சி நிலையம் என பெயர்மாற்றம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே தொடர் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்