யாழில் தனியார் வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்ட ஐவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதி

யாழில் தனியார் வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்ட ஐவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

27 Oct, 2017 | 8:48 pm

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சையை அடுத்து, பாதிக்கப்பட்ட 5 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தனியார் வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்ட 10 பேர் முன்னதாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் 5 பேர் யாழ். போதனா வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்திலுள்ள குறித்த தனியார் வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை மாலை (21) பேருக்கு கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 5 பேருக்கும் வவுனியாவைச் சேர்ந்த மூவருக்கும் புத்தளத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் மன்னாரைச் சேர்ந்த ஒருவருக்கும் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சத்திரசிகிச்சை வெற்றியளித்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்த போதிலும், மறுநாளே குறித்த நபர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

அதிகப் பணம் செலுத்தி மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் இதுவரையில் அந்த தனியார் வைத்தியசாலை நிர்வாகம் உரிய பதிலை வழங்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் நியூஸ்பெஸ்ட்டுக்கு குறிப்பிட்டனர்.

இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணத்திலுள்ள குறித்த தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் பி. கேசவராஜிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான அனைத்து மாதிரிகளும் இரசாயனப் பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆய்வு அறிக்கை கிடைத்ததன் பின்னர் அது தொடர்பில் தெளிவுபடுத்தப்படும் எனவும் டொக்டர் பி.கேசவராஜ் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்