பொத்துவில்லில் 39 ஆசிரியர்கள் இடமாற்றம்: எதிர்ப்பு தெரிவித்து மக்களும் மாணவர்களும் ஆர்ப்பாட்டம்

பொத்துவில்லில் 39 ஆசிரியர்கள் இடமாற்றம்: எதிர்ப்பு தெரிவித்து மக்களும் மாணவர்களும் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

27 Oct, 2017 | 8:19 pm

அம்பாறை – பொத்துவில் உப கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றிய 39 ஆசிரியர்களை இடமாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொத்துவில் பெரிய பள்ளிவாசலுக்கு அருகிலிருந்து வலயக்கல்வி அலுவலகம் வரை எதிர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், சமூக நலன் விரும்பிகள் என பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 21 பாடசாலைகளுக்கு மாணவர்கள் இன்று சமூகமளிக்கவில்லை.

இடமாற்றம் தொடர்பில் பொத்துவில் உப வலயக்கல்விப் பணிப்பாளர் என். அப்துல் வஹாப்பிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

தமது அனுமதியின்றி அக்கரைப்பற்று முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளரான ஏ.எல்.எம். காசிம் என்பவரால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், இடமாற்றம் மேற்கொள்வதற்கான காலப்பகுதிக்குள் அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளராக செயற்பட்ட ஏ.எல்.எம். காசிம் மூதூர் வலயத்திற்கு இடமாறிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொத்துவில் உப கல்வி வலயப் பணிப்பாளர் என். அப்துல் வஹாப் நியூஸ்பெஸ்ட்டுக்கு குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்