நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தினால் தூரப்பிரதேசங்களும் பாதிப்படையும் அபாயம்

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தினால் தூரப்பிரதேசங்களும் பாதிப்படையும் அபாயம்

எழுத்தாளர் Bella Dalima

26 Oct, 2017 | 9:00 pm

மக்களின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் அமைக்கப்பட்ட நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன.

தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படல் வேண்டும் என பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அனல் மின் உற்பத்தியின் மூலம் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் சூழலியலாளர்கள், நிபுணர்கள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் எடுத்துக்கூறியும் நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது.

தற்போது மின் உற்பத்தி நிலையத்தினால் வௌியேறும் நிலக்கரி கலந்த புகையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளோ ஏராளம்.

விவசாயத்தை நம்பி வாழும் மக்களே இந்த மின் உற்பத்தி நிலையத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மின் உற்பத்தி நிலையக் கழிவுகளால் மீன் வளம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீனவர்களின் ஜீவனோபாயம் கேள்விக்குறியாகியுள்ளது.

நாட்டிற்கு ஔியேற்றுவதற்காக தமது பிரதேசங்களை தியாகம் செய்த மக்களுடைய வாழ்வில் இன்னும் ஔியேற்றப்படாமை கவலைக்குரியதே.

பிரதேசத்தில் உள்ள வீடுகளில் தினமும் நிலக்கரி தூசுகள் குவிந்து மக்கள் நோய்வாய்ப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தினால் நாட்டில் உள்ள தூர பிரதேசங்களும் பாதிப்படையும் அபாயம் உள்ளதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

1.35 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இருந்து முதற்கட்டமாக 300 மெகாவோட் மின்சாரம் 2011 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது.

பின்னர் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தின் மூலம் 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

கடந்த காலங்களில் 25 தடவைகளுக்கும் மேலாக நுரைச்சோலை அனல் மின் நிலையம் செயலிழந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகின் ஏனைய நாடுகள் நிலக்கரி மூலமான மின் உற்பத்தியை நிறுத்தி மாற்றுத் திட்டங்களுக்கு செல்லும் போது, இலங்கையில் இந்த நிலைமை நீடிக்கிறது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி கொள்வனவு செய்யும் போது 1.8 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

விலை மனு முறையை மீறி கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளதாக நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், அந்த விலை மனுவை இரத்து செய்து மீண்டும் விலை மனு கோருமாறு கடந்த வருடம் ஜூலை 13 ஆம் திகதி சிபாரிசு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்