அரசியல் கைதிகள் 32 ஆவது நாளாக உண்ணாவிரதம்: வழக்கினை மாற்றக்கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்

அரசியல் கைதிகள் 32 ஆவது நாளாக உண்ணாவிரதம்: வழக்கினை மாற்றக்கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்

எழுத்தாளர் Bella Dalima

26 Oct, 2017 | 6:58 pm

தமிழ் அரசியல் கைதிகள் 32 ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்ட தமது வழக்குகளை வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என கோரி மூன்று தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதியரசன் சுலக்ஸன், கணேசன் தர்சன், இராசதுரை திருவருள் ஆகிய தமிழ் அரசியல் கைதிகளே அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் பொது அமைப்புக்கள் இன்று சந்தித்தன.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சேலைன் ஏற்றப்படுவதாலேயே அவர்கள் இன்னமும் உயிருடன் இருப்பதாகவும் அவர்களின் உடல்நிலை மோசமடைந்திருப்பதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

இந்நிலையில், உண்ணாவிரதம் இருக்கும் மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கினை வவுனியாவிற்கு மாற்றுமாறு கோரி மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தினால் நகர்த்தல் பத்திரம் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

அரசியல் கைதிகளை பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யுமாறு கோரியும் அநுராதபுரத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கினை மாற்றுமாறு கோரியும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் கையெழுத்து சேகரிக்கப்பட்டது.

ஜனாதிபதிக்கும், மனித உரிமை அமைப்புகளும் இந்த கையெழுத்து பிரதிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்