தமிழ் அரசியல் கைதிகள் 29 ஆவது நாளாக உண்ணாவிரதம்: வடக்கு, கிழக்கில் கையெழுத்து வேட்டை

தமிழ் அரசியல் கைதிகள் 29 ஆவது நாளாக உண்ணாவிரதம்: வடக்கு, கிழக்கில் கையெழுத்து வேட்டை

எழுத்தாளர் Bella Dalima

23 Oct, 2017 | 7:53 pm

தமிழ் அரசியல் கைதிகள் 29 ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் உடல் நிலையில் எவ்விதப் பிரச்சினைகளும் இல்லையென சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்ட வழக்கினை வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் எனக்கோரி மூன்று தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன், இராசதுரை திருவருள் ஆகிய தமிழ் அரசியல் கைதிகளே அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இந்த கையெழுத்து வேட்டையை மேற்கொண்டுள்ளன.

இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழகத்தில் நான்காவது நாளாக தொடர் வகுப்பு பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு விரைவில் தீர்வு வழங்க வேண்டும் என யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கிருஸ்ணராஜா கிருஸ்ணமீனன் தெரிவித்தார்.

அரசியல் கைதிகளின் வழக்கினை மாற்றக்கோரியும் பொதுமன்னிப்பளித்து அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரியும் கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்