தனுஷ் மீது மீண்டும் முறைப்பாடு

தனுஷ் மீது மீண்டும் முறைப்பாடு

தனுஷ் மீது மீண்டும் முறைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2017 | 11:39 am

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ஆவணங்கள் போலி என மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ்.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த எம்.மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் தான் என்றும், வயதாகிவிட்ட எங்களுக்கு அவர் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்றும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஆனால் இந்த வழக்கில் உண்மை இல்லை, எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை மேல் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு பதில் மனு தாக்கல் செய்த கதிரேசன், நடிகர் தனுஷ் எனது மகன்தான் என்று நிரூபிக்க போதிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என்று கூறியிருந்தார்.

மேலும் எனது மகன் கலைச்செல்வன் தான் தற்போது தனுஷ் என்று பெயரை மாற்றி சினிமாவில் நடித்து வருகிறார் என்றும் அவனது பள்ளிச் சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் மேல்நீதிமன்றத்தில் கதிரேசன் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை இரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் தரப்பு சார்பில் மதுரை மேல்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தனுஷின் அங்க அடையாளங்களை சரிபார்க்க உத்தரவிட்டனர்.

இதையடுத்து தனுஷ் அவரது அடையாளங்களை தாக்கல் செய்திருந்தார், இந்த வழக்கின் தீர்ப்பு திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நடிகர் தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலி என மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தற்போது கதிரேசன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்