கண்டி – நுவரெலியா பிரதான வீதியை மறித்து 12 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டம்

கண்டி – நுவரெலியா பிரதான வீதியை மறித்து 12 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

23 Oct, 2017 | 8:29 pm

கண்டி – புஸ்ஸல்லாவ, பெரட்டாசிக்கு செல்லும் பிரதான வீதியினை புனரமைத்துத் தருமாறு கோரி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டி – நுவரெலியா பிரதான வீதியினை மறித்து மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

பெரட்டாசியில் இருந்து ஊர்வலமாக டெல்டா சந்தி வரை சென்று, பின்னர் டெல்டா சந்தியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எல்பொட வடக்கு, காச்சாமலை உள்ளிட்ட 12 தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 3000 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

காலை 10 மணியில் இருந்து கண்டி – நுவரெலியா பிரதான வீதியினை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் காரணமாக கண்டி – நுவரெலியா பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார்.

புஸல்லவா – பெரட்டாசி பிரதான வீதி சுமார் 21 கிலோ மீற்றர் தூரம் கொண்டது.

25 வருடங்களாக புனரமைக்கப்படாமல் காணப்பட்ட வீதியினை புனரமைத்துத் தருவதாகக் கூறி வீதி நிர்மாணப்பணிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுமார் 4 கிலோ மீற்றர் தூரம் மாத்திரம் புனரமைக்கப்பட்ட நிலையில், வீதி புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மேலும், பெரட்டாசி தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலை தற்போது மருந்தகமாக செயற்பட்டு வருவதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

இதன் காரணமாக தமக்கு புஸ்ஸல்லாவ வைத்தியசாலையை நோக்கி செல்ல வேண்டியுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.

புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் வழங்கப்பட்ட வாக்குறுதியினை அடுத்து, ஆர்ப்பாட்டக்கார்கள் கலைந்து சென்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்