இலங்கைக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அபார வெற்றி

இலங்கைக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அபார வெற்றி

எழுத்தாளர் Bella Dalima

23 Oct, 2017 | 10:38 pm

இலங்கை அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரொன்றை முதன்முறையாகக் கைப்பற்றியது.

இலங்கை அணிக்கு எதிரான ஜந்தாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுகளால் அபார வெற்றியீட்டியது.

சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

இலங்கை அணியின் முதல் 4 விக்கெட்டுகளும் 08 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன.

தினேஷ் சந்திமால் ஓட்டமின்றி ஆட்டமிழக்க அணித்தலைவர் உபுல் தரங்க 08 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

மத்திய வரிசையில் துடுப்பெடுத்தாடிய திஸர பெரேரா 25 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.

08 துடுப்பாட்ட வீரர்களும் 10 க்கும் குறைவான ஓட்டங்களோடு ஆட்டமிழக்க இலங்கை அணி 26.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றது.

தனது இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடும் பாகிஸ்தானின் உஸ்மான் கான் 34 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு இமாம் உல் ஹக், பக்கர் சமான் ஜோடி சிறந்த ஆரம்பத்தை வழங்கியது.

இருவரும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய நிலையில், பாகிஸ்தான் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக உஸ்மான் கான் தெரிவானார்.

தொடர் முழுவதும் பிரகாசித்த ஹசன் அலி தொடரின் சிறப்பாட்டக்காரர் விருதுக்கு தகுதியானார்.

இதன் மூலம் இலங்கை அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி ஜந்து போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரொன்றை முதன்முதலாகக் கைப்பற்றியது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்