அரியாலை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு

அரியாலை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

23 Oct, 2017 | 5:51 pm

யாழ்ப்பாணம் – அரியாலை, உதயபுரம் பகுதியில் நேற்று (22) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியாலை – மணியன் தோட்டத்தைச் சேர்ந்த 24 வயதான டொன் பொஸ்கோ ரிக்மன் என்பவர் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில்
வீட்டிலிருந்து தனது நண்பர் நிசாந்தனுடன் வௌியில் சென்றுள்ளார்.

அவருடன் உதயபுரம் முதலாம் குறுக்குத் தெருவில் மோட்டார் சைக்கிளின் பின்புறமாக அமரந்து பயணித்துள்ளார்.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில், மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் அமர்ந்திருந்த பொஸ்கோ ரிக்மன் படுகாயமடைந்தார்.

பின்னர் அவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சுமார் 6 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை பலனின்றி இரவு 9.30 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற யாழ். நீதவான் எஸ். சதீஸ் விசாரணைகளை மேற்கொண்டதுடன், வைத்தியசாலைக்கு சென்று சடலத்தைப் பார்வையிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த துப்பாக்கிப்பிரயோகத்தில் சிறிய ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

ரிவால்வர் அல்லது பிஸ்ட்டல் ரக துப்பாக்கி தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்