அரியாலையில் இளைஞர் சுட்டுக்கொ​லை: விசாரணைகள் ஆரம்பம்

அரியாலையில் இளைஞர் சுட்டுக்கொ​லை: விசாரணைகள் ஆரம்பம்

அரியாலையில் இளைஞர் சுட்டுக்கொ​லை: விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2017 | 6:27 am

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த இளைஞனின் சடலத்தை யாழ். நீதவான் எஸ்.சதீஸ்தரன் சென்று பார்வையிட்டுள்ளதுடன், மரண விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

அரியாலை பகுதியில் நேற்று மாலை மூன்று மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அரியாலை – கொய்யாத்தோட்டம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இருவர் மீது மோட்டார் சைக்களில் சென்ற அடையாளம் தெரியாத இருவரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளை செலுத்திய 27 வயதான தொன் பொஸ்கோ றிக்மன் என்ற இளைஞரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர். எஸ். சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

எனினும் சிகிச்சை பலனிற்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்