ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கைக்கான கட்டணம் இதுவரை கிடைக்கவில்லை

ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கைக்கான கட்டணம் இதுவரை கிடைக்கவில்லை

எழுத்தாளர் Bella Dalima

18 Oct, 2017 | 8:06 pm

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அரச தனியார் கூட்டு வர்த்தகமாக செயற்படுத்துவது தொடர்பிலான உடன்படிக்கைக்காக சீன நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகை இதுவரை திறைசேரிக்கு கிடைக்கவில்லையென அதன் செயலாளர் எச்.எஸ். சமரதுங்க தெரிவித்தார்.

இலங்கை வழங்க வேண்டிய வசதிகள் முழுமையாகக் கிடைக்கும் வரை அவர்கள் கட்டணம் செலுத்த மாட்டார்கள் என திறைசேரியின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டை துறைமுக கொடுக்கல் வாங்கலில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்தவுடன், ரூபாவின் பெறுமதி நிலைப்படுத்தப்படும் என கடந்த வருடம் நவம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாதிநி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்திருந்தார்.

இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் சைனா மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனங்களுக்கு இடையில் அரச தனியார் கூட்டு வர்த்தகமாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நடத்திச்செல்வதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு மூன்று மாதங்களாகின்றன.

உடன்படிக்கையின் பிரகாரம் தேவையான வசதிகளைப் பெற்றுக்கொடுக்க ஆறு மாதங்கள் செல்லும் என துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாதிநி பராக்கிரம திஸாநாயக்க தெரிவித்தார்.

அந்த செயற்பாடுகள் தற்போது இடம்பெறுவதாகவும், அதன் பின்னர் சைனா மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் அந்தக் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சீன நிறுவனத்தினால் கிடைக்க வேண்டிய பணத்தின் முதற்பகுதி பெரும்பாலும் அடுத்த மாதம் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரம் கிடைக்கலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.

முதற்கட்டமாக 100 மில்லியன் டொலர் கிடைக்கவுள்ளதுடன், பின்னர் மூன்று மாதங்களில் 330 மில்லியன் டொலர் இரண்டாம் கட்டமாகக் கிடைக்கவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்