எதிர்பார்ப்புகள் ஈடேறா நிலையில் தீபாவளியை எதிர்நோக்கிய தோட்டப்புற மக்கள்

எதிர்பார்ப்புகள் ஈடேறா நிலையில் தீபாவளியை எதிர்நோக்கிய தோட்டப்புற மக்கள்

எழுத்தாளர் Bella Dalima

18 Oct, 2017 | 6:58 pm

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று தீபாவளி களைகட்டியிருந்தாலும் தோட்டப்புறங்களில் அதனைக் காணமுடியவில்லை.

தமது நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறாத நிலையில், தோட்டப்புற மக்கள் இன்று தீபாவளியை எதிர்நோக்கினர்.

நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை, தொடர் குடியிருப்புகளில் இருந்து மீண்டு நிரந்த சொந்த வீடுகளில் குடியமர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, தீபாவளி முற்கொடுப்பனவு, சம்பளப் பணத்தில் அறவிடப்பட்ட ஊழியர் சேமலாப நிதியை பெற்றுக்கொள்ளும் உரிமை என அனைத்துமே மறுக்கப்பட்ட நிலையிலேயே தோட்டத் தொழிலாளர்கள் இன்று தீபாவளிப் பண்டிகையை எதிர்நோக்கினர்.

பண்டிகை நாட்களையாவது மகிழ்ச்சியுடன் தமது குடும்பத்தாரோடு கொண்டாட வேண்டும் என்ற அவர்களின் ஏக்கம் இம்முறையும் ஈடேறவில்லை.

மேலும், மலையகத்தின் பல பகுதிகளிலும் கடந்த காலங்களில் ஏற்பட்ட மண் சரிவினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் தற்காலிக முகாம்களிலேயே தங்கியுள்ளனர்.

முகாம்களில் தொடர்ந்தும் வாழ முடியாதமையினால் பலர் மீண்டும் அபாயகரமான தமது சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர்.

ஆனாலும், ஆகக்குறைந்த சம்பளம் பெறும் தோட்டத்தொழிலாளர்கள் தமது தொழிற்சங்கங்களை வலுப்படுத்த மாதாந்தம் சந்தா செலுத்தத் தவறுவதில்லை.

இவர்கள் இவ்வாறு சிரமப்படும் போது, இவர்களின் வாக்குகள் மூலம் பாராளுமன்றம் சென்று, அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் அலரி மாளிகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபாவளியைக் கொண்டாடியிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்