யாழ். குடாநாட்டில் தீவிரமடையும் டெங்கு: கடந்த மூன்று நாட்களில் இருவர் உயிரிழப்பு

யாழ். குடாநாட்டில் தீவிரமடையும் டெங்கு: கடந்த மூன்று நாட்களில் இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

16 Oct, 2017 | 8:18 pm

யாழ். குடாநாட்டில் மீண்டும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு தீவிரமடைந்து வருவதாக சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வருடம் யாழ்ப்பாணத்தில் 259 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

குடாநாட்டில் கடந்த மூன்று நாட்களுக்குள் இருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 9 வயதான சாரா நேற்று (15) உயிரிழந்தார்.

யாழ். இணுவில் பகுதியைச் சேர்ந்த 49 வயதான சிறிராஜா மல்லிகா தேவி என்ற பெண் நேற்று முன்தினம் (14) உயிரிழந்தார். இவர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தமை பிரேதப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் வழிகாட்டலில் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஏற்பாடு செய்திருந்த இந்த டெங்கு ஒழிப்புத் திட்டத்தில் இராணுவத்தினர், பொலிசார், சுகாதார ஊழியர்கள் மற்றும் தன்னார்வத்தொண்டர்கள் இணைந்திருந்தனர்.

யாழ்ப்பாணம் முழுவதும் 155 குழுக்களாகப் பிரிந்து வீடுகள் மற்றும் வளாகங்களை இவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

இதன்போது நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த சிலருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்