பப்புவா நியூகினியா தடுப்பு முகாமில் உயிரிழந்தவரின் சடலம் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது

பப்புவா நியூகினியா தடுப்பு முகாமில் உயிரிழந்தவரின் சடலம் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

16 Oct, 2017 | 8:15 pm

பப்புவா நியூகினியாவில் உள்ள தடுப்பு முகாமில் உயிரிழந்த புகலிடக்கோரிக்கையாளர் இராஜேந்திரன் ரஜீவின் சடலம் இன்று நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது.

யாழ்ப்பாணம் – மீசாலையைச் சேர்ந்த 32 வயதான இராஜேந்திரன் ரஜீவ் என்பவர் அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் சென்றிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, பப்புவா நியூகினியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த மாதம் 29 ஆம் திகதி உயிரிழந்தார்.

விமானத்தினூடாகக் கொண்டுவரப்பட்ட அவரின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு இன்று அதிகாலை கொண்டு செல்லப்பட்டது.

சடலம் மீதான ஆரம்பகட்ட விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் திலின வனிகசேகர குறிப்பிட்டார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் உதவியுடன் சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் பப்புவா நியூகினியா முகாமை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவுஸ்திரேலியா அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

இந்த முகாமில் புகலிடக்கோரிக்கையாளர்களை தடுத்து வைப்பது சட்டவிரோதமானது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்