ஊழியர் சேமலாப நிதியத்திற்கு குறைவான விலைமனு வழங்கப்பட்டதால் அரசாங்கத்திற்கு நட்டம்

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு குறைவான விலைமனு வழங்கப்பட்டதால் அரசாங்கத்திற்கு நட்டம்

எழுத்தாளர் Bella Dalima

16 Oct, 2017 | 8:22 pm

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு குறைவான விலைமனு வழங்கப்பட்டதால், அரசாங்கத்திற்கு 550 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக முறிகள் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று வெளிக்கொணரப்பட்டது.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி நடத்தப்பட்ட ஏலத்தின் போது, ஊழியர் சேமலாப நிதியம் ஒரு பில்லியன் முறிகளை நிலையான சந்தையில் பெற்று, அந்த முறிகளை மேலும் 10 பில்லியன் பெறுமதியான பங்குகளுக்கு வர்த்தக சந்தையில் கொள்வனவு செய்துள்ளது.

அதே வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை ஊழியர் சேமலாப நிதியத்தில் 9.9 பில்லியன் ரூபா மேலதிகமாகக் காணப்பட்டதாகவும் ஆணைக்குழுவில் இன்று தெரியவந்துள்ளது.

ஊழியர் சேமலாப நிதியத்தின் 10 பில்லியன் ரூபாவைப் பயன்படுத்தி ஆரம்ப சந்தையில் முறிகள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தால், ஒவ்வொரு நூறு ரூபா கடனுக்கும் 95 சதம் அரசாங்கத்திற்கு இலாபம் கிடைத்திருக்கும் என ஆணைக்குழுவில் இன்று சாட்சியமளித்த நிதிச்சபையின் உறுப்பினர் நிஹால் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஊழியர் சேமலாப நிதியம் ஒரு பில்லியன் மாத்திரம் முதலீடு செய்தமையால் அந்த ஏலத்தில் 550 மில்லியன் ரூபா அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஏலத்தின் போது, பேர்ப்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனம், பான் ஏசியா வங்கியூடாக பாரிய விலை மனுக்களை நேரடியாக சமர்ப்பித்திருந்ததாக ஏற்கனவே ஆணைக்குழுவில் வெளிக்கொணரப்பட்டது.

இந்த ஏலத்தினூடாக அரசாங்கத்திற்கு 784 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழு முன்னிலையில் ஏற்கனவே சாட்சியமளித்த கணக்காய்வாளர்நாயகம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்